Monday, September 10, 2007

இடஒதுக்கீடா கேட்கிறீர்கள்...

இடஒதுக்கீடா கேட்கிறீர்கள்... குண்டுவெடிப்பை எதிர்கொள்ள தயாராகுங்கள்ஹிந்துத்துவ இயக்கத்திடமிருந்து வந்த மிரட்டல் கடிதம் எங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும் அதில் முஸ்லிம்கள் மீது மட்டுமே பழிசுமத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. சற்றும் அறிவுக்குப் பொருந்தாத முறையில் பள்ளிவாசல்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு களுக்கு கூட முஸ்லிம்களை குற்றம்சாட்டும் போக்கு தொடர்கிறது. இதில் தீவிரவாதிகளைப் பிடிப்பது, தண்டிப்பது என்ற முக்கிய நோக்கங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு முஸ்லிம்கள் மீது குற்றம்சாட்டுவது முக்கிய குறிக்கோளாகப் போய்விட்டது. ஹிந்து பயங்கரவாத இயக்கங்கள் மீது எந்த விசாரணையும் இதுதொடர்பாக எழுப்பப் படுவதில்லை. எந்த ஹிந்துத்துவ தீவிரவாதியும் விசாரிக்கப்படுவதில்லையே ஏன் என்ற கேள்வி நடுநிலையாளர்களின் மத்தியில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.
பார்பானியில் உள்ள முஹம்மதி பள்ளிவாசல் குண்டுவெடிப்பின் முக்கியக் குற்றவாளியான சஞ்சய் என்பவன் யார்? எந்த இயக்கத்தைச் சேர்ந்தவன்? நான்டெட்டில் ஆர்எஸ்எஸ்காரர் ஒருவரின் வீட்டில் ஒட்டுத்தாடியுடன் லுங்கி, குர்தா மற்றும் பைஜாமாக்கள் ஒளித்து வைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்த விசாரணையின் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லையே ஏன்?
ஹைதராபாத் மக்கள் பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த உடனேயே ஷஹீத் பிலால் என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக காவல்துறை தெரிவித்தது. அதோடு மகாராஷ்டிர மாநிலத்தின் ஜால்னா மாவட்டத்திலுள்ள சோஹப் ஜாகிர்தார் என்பவரைப் பிடித்து சிறையிலடைத்தது. இவ்வாறு முஸ்லிம்கள் மீது கெடுபிடி காட்டும் காவல்துறை, ஹிந்துத்துவ பயங்கரவாத அமைப்புகளின் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஹிந்துத்துவ பயங்கரவாத இயக்கங்களின் மீது சந்தேகத்தின் சிறிய சாயல்கூட படாதவாறு கவனமாக காவல்துறை செயல்படு வதாலேயே அவர்கள் எத்தகைய பயங்கரவாதச் செயல்களையும் செய்ய துணிந்து விட்டதாக சமூகநீதி ஆர்வலர்கள் சந்தேகம் எழுப்புகிறார்கள்.
ஆந்திராவில் இயங்கும் மூவ்மென்ட் ஃபார் பீஸ் அன்ட் ஜஸ்டிஸ் (ஙடஓ) என்ற முஸ்லிம் அமைப்புக்கு தர்மரக்ஷா என்ற ஹிந்துத்துவ பயங்கரவாத இயக்கம் மிரட்டல் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. சச்சார் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றக் கோரி ஹைதராபாத் இந்திரா பூங்காவில் ஙடஓ பேரணி ஒன்றை நடத்தியது. இவ்வமைப்புக்கு தர்மரக்ஷா என்ற ஹிந்துத்துவ பயங்கரவாத இயக்கத்தின் தளபதி என தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் வி.சேகர் என்பவர் மிரட்டல் கடிதத்தை எழுதியுள்ளார்.
அந்த மிரட்டல் கடிதத்தில், ஹிந்துக்கள் அல்லாதவர்களுக்கு எதிரான யுத்தம் தொடங்கிவிட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹைதராபாத் குண்டுவெடிப்புகள், இடஒதுக்கீடு கேட்பவர்களுக்கான அன்பளிப்பு என்ற தலைப்புடன் தொடங்குகிறது.
எங்கெல்லாம் தீமைகள்(!) வளர்கிறதோ, தவறுகள்(!) ஊக்கமளிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் அதனை அழிக்க வருவேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன் ராமாயணத்தின் நான்கு சுலோகங்களையும் குறிப்பிட்டிருக்கிறார். தர்மாரக்ஷா என்ற இயக்கத்தினை சேர்ந்தவர்கள் தாய்நாட்டின் ஆயுதங்களாகவும், ஆபரணங்களாகவும் உள்ளனர் என தனக்குத் தானே பெருமை யடித்துக் கொள்கிறது. அந்தக் கடிதம் முஸ்லிம்களை அழித்தொழிக்க வேண்டும் என்பதோடு அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் குட்டி அரசியல்வாதிகள், போலி மதச்சார்பின்மைவாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரையும் ஹிந்துக்கள் அல்லாத அனைவரையும் ஒழித்துக் கட்டுவோம், அதற்கான போரை அறிவிக்கிறோம் என்றும் அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.
இதுகுறித்து இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது நமது உளவுத்துறையின் பரிதாப நிலையைக் கட்டுவதாக மில்லி கெஜட் பத்திரிகை குறிப்பிடுகிறது. முஸ்லிம்கள் குறித்து கட்டுக்கதைகள் வெளியிடும் பத்திரிகைகள் கூட ஹிந்து பயங்கரவாத இயக்கம் ஒன்றின் மிரட்டல் கடிதம் குறித்த செய்தியை வெளியிடவில்லை.
யாருக்கு இடஒதுக்கீடு வேண்டுமோ அவர்கள் குண்டுவெடிப்பை சந்திக்கத் தயாராகுங்கள் என்று மிரட்டல் விடுத்துள்ள இந்தக் கடிதம் குறித்து இன்னமும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? இது எத்தகைய கடிதம் என்பது குறித்து ஆய்வு செய்ய நாம் விரும்பவில்லை. துணிச்சலே இல்லாத சில்லறைப் பேர்வழிகளின் மொட்டைக் கடிதமாகக் கூட இருக்கலாம் என காவல்துறை கண்டுகொள்ளாமல் இருந்திருக் கலாம். ஆனால் இம்மாதிரியான ஒரு மிரட்டல் கடிதத்தை முஸ்லிம் ஒருவர் அனுப்பி யிருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும். அவருக்கு சர்வதேச அளவில் தீவிரவாத தொடர்பு இருப்பதாக கதையளந்திருப்பார்கள்.
போகட்டும். சில வாரங்களுக்கு முன்பு அனுப்பப்பட்ட இந்த மிரட்டல் கடிதத்தை முக்கியமில்லாத ஒன்றாக ஆந்திர மாநில மற்றும் மத்திய புலனாய்வுத்துறை எண்ணி யிருக்கலாம். தற்போது மீண்டும் ஒரு குண்டுவெடிப்பை சதிகாரர்கள் நிகழ்த்தி யுள்ளதால் இந்த சதியின் பின்னணியில் இந்த 'மிரட்டல் கடித' ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் உள்ளனரா என்பது குறித்து துரிதமாக புலனாய்வு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதே நாட்டு மக்களின் வேண்டுகோளாகும்

Sunday, September 2, 2007

சச்சார் குழு பரிந்துரைகள் செயல் வடிவம் பெற்றது.

சச்சார் குழு பரிந்துரைகள் செயல் வடிவம் பெற்றது.
சச்சார் குழு பரிந்துரைக்கான செயல் திட்டங்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளது. அரசுப் பணிகளில் முஸ்லிம்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்வதற்கான வழிமுறைகள் உருவாக்கப்படும் என்றும் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் போதிய அளவு இடம் வழங்காததை தவிர்க்க உயர்நிலைக் குழு ஒன்று உருவாக்கப்படும் என்றும் மக்களவையில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் அப்துர் ரஹ்மான் அந்துலே தெரிவித்திருக்கிறார்.
முஸ்லிம்களின் கல்வி, சமூகம் மற்றும் பொருளாதாரநிலை குறித்து ஆய்வு செய்த நீதிபதி ராஜிந்தர் சச்சார் தலைமையிலான உயர் மட்டக்குழு தனது அறிக்கையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அமைச்சரவையில் தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய 15 அம்ச செயல் திட்டத்தை மத்திய அரசுக்கு சச்சார் குழு தெரிவித்தது. இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்த சிறுழுôன்மையினர் நலத்துறை அமைச்சர் அந்துலே இது ஒரு சரித்திர சிறப்பு மிக்க அறிக்கை என்றும் அதை தாக்கல் செய்யும் இந்த நேரம் வரலாற்று சிறப்பு மிக்க தருணம் என்று அவர் குறிப்பிட்டார். அந்த அறிக்கையில் அரசுத்துறை, பொதுத்துறை நிறுவனங்கள் பொதுத்துறை வங்கிகள் ஆகியவற்றில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க ஏற்கெனவே தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் மற்றும் ஆட்சி முறையில் முஸ்லிம்களுக்குப் போதிய பங்கு வழங்கப்படாதது தொடர்பாக சச்சார் குழு கவலை தெரிவித்திருப்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் அந்துலே அந்தக் குறைபாடுகளைக் களைய உயர்நிலைக்குழு அமைக்கப்பட்ருப்பதாக தெரிவித்தார்.
சச்சார்குழு அறிக்கையில் கூறப்பட்டிருப்தைப் போல அக்குழு தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்யும். முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் தொகுதிகள் தலித்களுக்கு ஒதுக்கீடு செய்யாமல் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க இக்குழு பார்த்துக் கொள்ளும். இதன் மூலம் அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவதில் உள்ள குறைபாடுகள் களையப்படும் என்றும் அமைச்சர் அப்துர்ரஹ்ôன் அந்துலே கூறினார்.
முஸ்லிம்கள் அதிகம் வாழும் 90 மாவட்டங்களில் அடிப்படை வசதிகளையும், வேலை வாய்ப்பையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் 338 நகரங்களில் கட்டமைப்பு வசதிகளில் உள்ளக் குறைபாடுகளைக் களைவதும் அவர்களுக்குப் பொருளாதார வாய்ப்புகளை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அந்துலே தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்களுக்காக மூன்று கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மவ்லானா ஆசாத் கல்வி அறக்கட்டளைக்கான மூலநிதி அதிகரிக்கப்படும். முஸ்லிம்களுக்கு தொழிற் பயிற்சி வழங்குதல் மற்றும் அவர்களுக்கு எளிதாகக் கடன் கிடைக்கச் செய்தல் ஆகியவற்றுக்கான விரிவாகத் திட்டத்தை உருவாக்கவும் அதைச் செயல்படுத்தி கண்காணிக்கவும் அமைச்சர்கள் குழு அமைக்கப்படும் என்றும் அந்துலே தெரிவிக்கிறார்.
முஸ்லிம் பெண்கள் உயர்கல்வி படிப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தேவையான இடங்களில் மகளிர் கல்விக் கூடங்கள் நிறுவப்படும். முஸ்லிம்கள் குறிப்பிட்ட அளவில் வாழும் பகுதிகளில் கஸ்தூரிபா காந்தி மழலையர் பள்ளிகள் திறக்கப்படும். முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இடைநிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளைத் திறக்க முன்னுரிமை அளிக்கப்படும். அந்தப் பகுதிகளில் சிறப்பு எழுத்தறிவு இயக்கம் நடத்தப்படும்.
முஸ்லிம்களுக்கு வங்கிக்கடன் வழங்குவதில் முன்னுரிமை வழங்குவதற்கு வசதியாக முஸ்லிம்கள் நிறைந்த பகுதிகளில் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகள் திறக்கப்படும்.
மதரஸாக் கல்வியை நவீனப்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்டும். மேலும் அவற்றில் உயர்கல்வி கற்பிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உர்து மொழி பிராந்திய மொழியாக அறிவிக்கப்பட்டு அதில் கல்வி கற்பிக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.மேலும் முஸ்லிம்களின் உடல்நலன் மற்றும் குடும்ப நிலை குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்துலே கூறினார்.
வக்ஃபு சொத்துக்களை பாதுகாக்கவும், அதன் மூலம் கிடைக்கும் வருவாயை உரிய முறையில் செலவிடவும் பொருத்தமான அமைப்பு உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.முஸ்லிம்களின் அவலநிலையை அகற்ற சமவாய்ப்பு ஆணையம் அமைக்கப்படும் என்று மேலும் அமைச்சர் உறுதி அளித்தார்